search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அசாம் கனபரி‌ஷத் கட்சி"

    தெலுங்கு தேசம், சிவசேனாவை தொடர்ந்து அசாம் மாநிலத்திலும் பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேற போவதாக அசாம் கனபரி‌ஷத் கட்சி எச்சரித்துள்ளது. #AsomGanaParishad #BJP
    கவுகாத்தி:

    அசாம் மாநிலத்தில் பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த கூட்டணியில் அசாம் கனபரி‌ஷத், போடாலேண்ட் மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    இந்த நிலையில் அசாம் கனபரி‌ஷத் கட்சி பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து விலக போவதாக எச்சரித்துள்ளது. அந்த கட்சியின் தலைவர் அதுல்போரா மாநில விவசாய துறை மந்திரியாக உள்ளார். அவர்தான் இந்த அறிவிப்பை வெளியிடடு இருக்கிறார்.

    அசாம் மாநிலத்தில் அண்டை நாடான வங்காள தேசத்தில் இருந்து ஏராளமான முஸ்லிம்கள் குடியேறி இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க கூடாது என்று அசாம் கனபரி‌ஷத் உள்ளிட்ட கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன.

    இது சம்பந்தமாக ஏற்கனவே உள்நாட்டு கலவரம் நடந்து வந்தது. ராஜீவ் காந்தி ஆட்சி காலத்தில் 1985-ம் ஆண்டு இது சம்பந்தமாக ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. அதில், 1971-ம் ஆண்டுக்கு முன்பு அசாமில் குடியிருப்பவர்களுக்கு குடியுரிமை வழங்குவது, அதற்கு பின்னர் வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்க கூடாது என்று அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்தது.

    ஆனால் அந்த ஒப்பந்தம் பாராளுமன்றத்தில் சட்டமாக அமலுக்கு வரவில்லை. இந்த பிரச்சினை இப்போது வரை பாராளுமன்ற இணைக்குழுவின் ஆய்வில் உள்ளது. அசாமில் நடந்த கடந்த சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா அசாம் கனபரி‌ஷத் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அப்போது அசாம் கனபரி‌ஷத் ராஜீவ்காந்தி காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தத்தை அமலுக்கு கொண்டுவர வேண்டும் என்று வற்புறுத்தியது. அதற்கு பாரதிய ஜனதா சம்மதம் தெரிவித்து. அதையடுத்து தான் அவர்களுக்குள் கூட்டணி ஏற்பட்டது.

    ஆனால் அந்த ஒப்பந்தத்தை இதுவரை நிறைவேற்றவில்லை. இதனால் அசாம் கனபரி‌ஷத் கட்சி கோபம் அடைந்துள்ளது. அதுல்போரா தலைமையிலான குழுவினர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.


    மேலும் இது சம்பந்தமாக அதுல்போரா கூறும்போது, மத்தியில் உள்ள பாரதிய ஜனதா அரசு புதுவிதமான குடியுரிமை சட்டத்தை அமலுக்கு கொண்டுவர முயற்சிக்கிறது. இதன்படி அசாமில் புதிதாக குடியேறிய மற்ற மதத்தினரையும் பிற்காலத்தில் குடியேறியவர்களையும், இந்திய மக்களாக கருதி குடியுரிமை வழங்க இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. இதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

    இந்த முயற்சியை தொடர்ந்து பாரதிய ஜனதா கையில் எடுத்தால் நாங்கள் அவர்கள் கூட்டணியில் இருந்து வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை. எனவே புதிய மசோதாவை அமலாக்க முயற்சித்தால் எங்களால் கூட்டணியில் நீடிக்க முடியாது என்று கூறினார்.

    ஏற்கனவே பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து தெலுங்குதேசம், சிவசேனா, மற்றும் சில சிறிய கட்சிகள் வெளியேறி இருக்கின்றன. இப்போது அசாம் கனபரி‌ஷத்தும் வெளியேறப்போவதாக எச்சரித்துள்ளது.

    இது பாரதிய ஜனதாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. அசாமில் அசாம்கனபரி‌ஷத் கூட்டணியில் இருந்து விலகினாலும் அந்த மாநிலத்தில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு ஆபத்து இல்லை. அங்கு மொத்தம் உள்ள 126 எம்.எல்.ஏ.க்களில் பாரதிய ஜனதா கூட்டணிக்கு 87 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதில் பாரதிய ஜனதாவுக்கு 61 பேரும், அசாம் கனபரி‌ஷத்துக்கு 14 பேரும், போடாலேண்ட் கட்சிக்கு 12 பேரும் உள்ளனர். அசாம் கனபரி‌ஷத் ஆதரவை வாபஸ் பெற்றாலும் பாரதிய ஜனதா அணியில் மெஜாரிட்டிக்கு தேவையான எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். #AsomGanaParishad #BJP
    ×